×

அரசியல், பொருளாதாரம், தேச பாதுகாப்பு என அனைத்திலும் ஒன்றிய பாஜ அரசு முற்றிலும் தோல்வி: காங்கிரஸ் காரிய கமிட்டியில் தீர்மானம்

ஐதராபாத்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில், நாட்டின் அரசியல் நிலைமை, பொருளாதாரம் மற்றும் தேச பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து முக்கிய பிரச்னையிலும் ஒன்றிய பாஜ அரசு தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரசின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்றதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற காரிய கமிட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றி அமைக்கப்பட்டது.

இதில், 84 உறுப்பினர்களுடன் இளம் தலைவர்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடக்கும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய காரிய கமிட்டி கூட்டம் இரவு வரை நீடித்தது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: காரிய கமிட்டி கூட்டத்தில், நாட்டின் நிலைமை, அரசியல் நிலைமை, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எல்லையில் கடுமையான சவால்களால் ஏற்படும் தேச பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றி நாங்கள் விவாதித்தோம். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பில் மிகுந்த சவால்கள் நிலவுகின்றன. எல்லையில் சீனாவால் பல நெருக்கடிகள் இருக்கும் நிலையில், உள்நாட்டில் மணிப்பூரிலும், காஷ்மீரிலும் பாதுகாப்பு சவால்கள் நிலவுகின்றன.

சீனாவுடன் பலதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், அவர்கள் எதிர்ப்பில் உறுதியாக நிற்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடியோ, இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்கிறார். இதனால் ஒரு அங்குலம் கூட பின்வாங்காத தனது பிடிவாதமான நிலைப்பாட்டை சீனா தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மணிப்பூர் அமைதியின்மையை எதிர்கொள்கிறது. பல நாடுகளுக்கு விரைவாகச் சென்று வரும் பிரதமர் மோடிக்கு, 2 மணி நேரத்தில் மணிப்பூருக்கு மட்டும் செல்ல நேரமில்லை. நிச்சயமாக காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பின் மீதான தாக்குதல்.

அதை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். இமாச்சலில் வரலாறு காணாத வெள்ளத்தால் கடுமையான பேரழிவு ஏற்படும், அரசியல் காரணமாக அதை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்காமல் உள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல். பணவீக்கத்தால் பல மாதங்களாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. அனைத்து அத்தியவாசிய பொருட்களின் விலையும் அதிகரித்து மக்கள் சிரமப்படுகின்றனர். வேலையின்மை 8.5 சதவீதத்தை நெருங்கியுள்ளது. மாதாந்திர ஏற்றுமதி குறைந்துள்ளது. எனவே, அரசியல், பொருளாதாரம், தேச பாதுகாப்பு என அனைத்து விஷயங்களிலும் ஒன்றிய பாஜ அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினர்.

இதைத் தொடர்ந்து, மணிப்பூரில் இனக்கலவரத்தால் பலியான மக்களுக்கும், இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தால் இறந்த மக்களுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
* பிரிவினைவாத அரசியலில் இருந்து நாட்டை விடுவிக்க, இந்தியா கூட்டணியை கொள்கை ரீதியாகவும், தேர்தல் ரீதியாகவும் வெற்றிக் கூட்டணியாக மாற்ற வேண்டும்.
* பிரதமர் மோடியின் ரோஸ்கர் மேளா எனும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிகள், அவர் அளித்த வாக்குறுதிபடி ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியதை மறைக்கும் புரளி நாடகம்.
* அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதான பாஜ அரசின் தாக்குதலை கண்டிக்கவும், எதிர்க்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் வலியுறுத்துகிறோம்.
* சாதி, மதம், பணக்காரர், ஏழை, சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படக் கூடிய தேசத்தை மீட்டெடுப்போம்.
* பிரதமர் மோடி மற்றும் பாஜவை கதிகலங்கச் செய்யும் இந்தியா கூட்டணி மேலும் பலமடைவதை வரவேற்கிறோம்.
* கூட்டாட்சி கொள்கைகள், நடைமுறைகளை அழித்த பாஜவை கண்டிக்கிறோம். நாட்டின் கூட்டாட்சி, அரசியல், பொருளாதாரம், தேச பாதுகாப்பு என அனைத்து விஷயத்திலும் ஒன்றிய பாஜ அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.
* எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் தற்போதைய உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும்.
* நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டு தாக்கல் செய்யப்பட உள்ள தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது.
* பிரிவினைவாத அரசியலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான இந்தியா கூட்டணியின் நோக்கத்தை, தேர்தல் வெற்றியாக மாற்ற வேண்டும்.
* மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, இன்று காரிய கமிட்டியின் விரிவான கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கமிட்டி உறுப்பினர்கள் தவிர மாநில கட்சி தலைவர்கள், மத்திய தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள், கட்சி எம்பிக்கள் என 159 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள தெலங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் உத்திகள் குறித்த முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து தெலங்கானா தேசிய ஒருங்கிணைந்த நாளையொட்டி, ஐதராபாத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தெலங்கானா தேர்தல் பிரசாரத்தை சோனியா காந்தி தொடங்கி வைத்து 6 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெல்லிக்கு வெளியே காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* தலைமை ஏற்க வேண்டிய நேரம்
காங்கிரஸ் காரிய கமிட்டி தொடர்பாக சோனியா காந்தி விடுத்த செய்தியை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தனது டிவிட்டரில் நேற்று பகிர்ந்தார். அதில், ‘‘2014ம் ஆண்டு ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம், தெலங்கானா மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். தெலங்கானா மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கிறது. இப்போது, மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான புதிய சகாப்தத்திற்கு இட்டுச் செல்வதற்கான தலைமை ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தெலங்கானா மற்றும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் கண்ணியத்துடன் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுத காங்கிரஸ் காரிய கமிட்டி தயாராக உள்ளது’’ என சோனியா காந்தி கூறி உள்ளார்.

* மக்களை திசை திருப்ப வெற்று முழக்கங்கள்
கூட்டத்தை தொடங்கி வைத்து, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: இன்று, நாடு பல கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. மணிப்பூரில் நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை உலகமே பார்த்தது. மணிப்பூர் வன்முறையின் தீ, அரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது. இந்த சம்பவங்கள், உலக அரங்கில் நவீன, முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வகுப்புவாதம், வன்முறை தீயை கட்டுப்படுத்த வேண்டிய ஒன்றிய பாஜ அரசோ, அதில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது. இது நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை அழிக்கிறது. எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றத்தை தான் பாஜ அரசு விரும்புகிறது. எம்பிக்கள், ஊடகம் மற்றும் பொதுமக்கள் என யாரும் கேள்வி கேட்பதை அவர்கள் விரும்பவில்லை.

இந்தியா கூட்டணியின் வளர்ச்சியால் பாஜ குழப்பமடைந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் அவர்களின் பழிவாங்கல்கள் மேலும் அதிகரிக்கலாம். இப்போதே அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை ஏவி எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்கும் செயலில் பாஜ ஈடுபட்டுள்ளது. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் வன்முறை, சமத்துவமின்மை அதிகரிப்பு, விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னை என அனைத்து பிரச்னையிலும் தோல்வி அடைந்த பாஜ அரசு நாட்டின் கவனத்தை திசை திருப்ப, ‘தற்சார்பு இந்தியா’, ‘5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’, ‘புதிய இந்தியா’, ‘அமிர்தகாலம்’, ‘3வது பெரிய பொருளாதாரம்’ என வெற்று முழக்கங்களை முழங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post அரசியல், பொருளாதாரம், தேச பாதுகாப்பு என அனைத்திலும் ஒன்றிய பாஜ அரசு முற்றிலும் தோல்வி: காங்கிரஸ் காரிய கமிட்டியில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Union Baja Government ,Congressional Council ,Hyderabad ,Congress ,Task Council ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...